லெப்டினன் கர்னல்(ஒய்வு பெற்ற) முகமட் இட்ரிஸ் ஹசான், கடிதம்
“கிளிங் ரத்தமும் கூச்சல் போடும் இந்தியர்களும்” என்ற தலைப்பில் மலேசியாகினி வெளியிட்ட செய்தி பற்றி நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
முக்கியப் பத்திரிக்கையான உத்துசான் மலேசியா சக மலேசியர்களை அவர்களுடைய இனம் காரணமாக தாக்குவது தேவையற்றது. அவசியம் இல்லாதது. 1940 களின் இறுதியில் பாகாங்கில் எனது சொந்த ஊரான ரவூப்பில் நான் சிறுவனாக வாழ்ந்த காலம் எனது நினைவுக்கு வருகிறது.
தமிழ்த் தொழிலாளர்கள் நண்பகலில் சுட்டெறிக்கும் வெயிலில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் வேலை செய்து கொண்டிருக்கும் சாலைகளை நான் பல முறை கடந்து சென்றிருக்கிறேன்.
கோடாரிகளையும் மண்வெட்டிகளையும் கொண்டு அவர்கள் மலை ஓரங்களில் கடினமான பாறைகளை கொத்தி சாலைகளை வடிவமைத்துக் கொண்டிருப்பர்.
அவர்கள் நல்ல ஆடைகளை அணிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெள்ளைத் துணி ஒன்றை தலையில் டர்பனைப் போன்று சுற்றிக் கொண்டிருப்பர்.
வேலைகளைச் செய்யும் போது சூடான உருக்கிய தார், தங்களுடைய குச்சி போன்ற கால்களைப் பொசுக்கி விடாமல் இருக்க சாக்குத்துணிகளைக் கட்டியிருப்பார்கள்.
என்றாலும் அவர்கள் புன்னகை செய்வதற்கு நேரம் இருந்தது. கடந்து செல்லும் கார்களைப் பார்த்து அவர்கள் கைகளை அசைத்தனர். அவர்கள் “கூலிகள்” என்று அழைக்கப்பட்டனர்.
அடிமைகளுக்கு வழங்கப்படும் குடியிருப்புக்களில் அவர்கள் வசித்தனர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மலாயாவில் பெரும்பாலான சாலைகள் இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு கட்டப்பட்டதாக காலஞ்சென்ற எனது தந்தை கூறுவார்.
அவர்கள் மலேரியா கொசுக்கள் நிறைந்த ரப்பர் தோட்டங்களில் உழைத்தனர். தூய்மையற்ற அசுத்தமான சூழ்நிலைகளில் அவர்களும் அவர்களது குடும்பங்களும் வாழ்ந்தன. வெள்ளைக்கார “துவான்” அவர்களை அடிமைகளைப் போன்று நடத்தினார். அவர்களுடைய பிரச்னைகளை மறப்பதற்கு அவர்களை கள் குடிப்பதற்கும் அனுமதித்தார்.
மீண்டும் “டோட்டீஸ்” என்று அழைக்கப்பட்ட அதே கூலிகள் தான் 60 களின் தொடக்கம் வரையில் நமது கக்கூஸ் வாளிகளை சுத்தம் செய்தனர். மற்ற இனங்களைச் சேந்தவர்கள் அந்த வேலையைச் செய்யத் தயங்கினர். அந்த “டோட்டீஸ்”கள் என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒர் ஒடையில் அந்த ரப்பர் வாளிகளை வெறும் கைகளால் சுத்தம் செய்வதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
சுருக்கமாகச் சொன்னால் அசுத்தமான, உடல் உழைப்பு வேலையாக இருந்தால் கிளிங் என்ற அவமானப்படுத்தும் சொற்களால் அழைக்கப்பட்ட அந்த தமிழ் கூலிகள் நமக்காக அதனைச் செய்தனர்.
இப்போது காலம் மாறி விட்டது. அவர்களுடைய வழித் தோன்றல்கள் எல்லாத் துறைகளிலும் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் நமது சமுதாயத்தில் உரிய இடத்தைப் பெற விரும்புகின்றனர். அவர்களை நாம் ஏளனம் செய்யக் கூடாது. அவர்கள் மீது வெறுப்பைக் காட்டக் கூடாது.
இராணுவ வீரன் என்ற முறையில் எனது பல இந்திய/தமிழ் நண்பர்கள் இந்த நாட்டுக்காக சண்டையிட்டு மடிந்திருப்பதை நான் அறிவேன். நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் நம்முடன் இணைந்திருந்தவர்களில் அவர்களும் ஒரு பகுதியினர். இந்த நாட்டை வளமாக்குவதிலும் மகத்தானதாக மாற்றுவதிலும் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்த நாடு உண்மையில் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானதாகும்.