Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday, 15 January 2016


பினாங்கு மாநில தைப்பூச பெருவிழா

தொகுப்பு ஆர்.ராமனி



பினாங்கு தைப்பூசம் என்பது மலேசியாவின் ஜோர்ஜ் டவுன் பினாங்கு மாநகரில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் இடம்பெறும் தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும்.
தமிழர் மட்டும் அன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் தண்ணீர்மலை முருகன்.சீனர்களும் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என உடைக்கிறார்கள்.


                                                           முதலாம் நாள் விழா

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி (நகரத்தார்) பூசம்' எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு வீதியில் உள்ள கோவில் (கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில் காவடிகளுக்கும், முருகனின் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்.

மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்லும். அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும். ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு, காப்பி, தேநீர் உள்பட அன்னதான(மு)ம் வழங்குவார்கள். ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்திருப்பார்கள்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் நடைபெறும். சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டிருப்பார்கள். அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உ


ள்நடையில் நிறுத்தி பக்தர்கள் 'இருவர் பாமரம் வீச, பெரியவர் ஒருவர் கட்டியம் கூறி முருகனின்மேல் பாடுவார்.


இரண்டாம் நாள் விழா

இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைச் செலுத்துவார்கள்.
அன்று முருகப் பெருமானுக்கு மகேசுவர பூஜை அபிசேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் குழந்தைகளுக்கு முடி இறக்கித் தொட்டிகட்டுதல் இடம்பெறும். இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இருபுறமும் இருவர் பிடித்துக்கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி, புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு, தொட்டிலுக்குள் குழந்தைகளைப் படுக்கவைத்து அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக கரும்புத் தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப் பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சக்கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத்திற்கும், மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிப்பார்கள்.

அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு, கோவிலுக்குள் (சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டு வந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுப் பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும். காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது.


மூன்றாம் நாள் விழா

மூன்றாம் நாள் காலை ('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீசுவரரின் சன்னிதியின் முன் சாலையில் சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள்.

பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள். அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பாத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிசேக ஆராதனைகள் செய்து சிதறு தேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்தும் திரும்புவார்கள்.

அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து (நான்காம் நாள்) காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு வீதியில் உள்ள கோவில் வீட்டை வந்து சேரும். அதன் பின் ரதத்தில் இருந்து சாமி இறக்கி வீட்டினுள் வைத்து தீப தூபங்கள் காட்டி அதனுடன் இனிதே தைப்பூச உற்சவம் முற்றுப்பெறும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home