கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது கவிஞர் வைரமுத்து எழுதியது)
ஒரு
தேவகானம்
முடிந்து விட்டது
எங்கள்
தமிழ்ச்சங்கம்
கலைந்து விட்டது
சரஸ்வதியின்
வீணையில்
ஆனந்த நரம்பொன்று
அறுந்து விட்டது
அந்த விமானத்தில்
எங்கள் ராஜ குயிலின்
கூடுமட்டுமே
கொண்டு வரப்படுகிறது
வார்த்தைக்கு ருசிதந்த
வரகவியே
உன்னை
வரவேற்கக் காத்திருந்த
வர்ணமாலைகளை
உன்
சடலத்தின்மேல் சாத்தவா?
எழுத முடியவில்லை
என்னால்
கண்ணீரின்
கனம் தாங்காமல்
வார்த்தைகள்
நொண்டுகின்றன
காற்றுக்கு
நன்றியில்லையா?
கவிதை வரிகளால்
காற்று மண்டலத்தையே
இனிப்பாக்கினாயே
உனது சுவாசத்துக்கு
அந்தச்
சண்டாளக் காற்று ஏன்
சம்மதிக்க மறுத்தது?
அந்நிய மண் என்பதால்
மரணம் – உன் உயிரை
அடையாமல் தெரியாமல்
அள்ளிப் பருகியதா?
எத்தனை இலக்கியம்
எழுதிய விரல்
எத்தனை கவிதைகள்
முழங்கிய குரல்
எத்தனை கருத்தை
நினைத்த மனம்
ஓ
மரணத்தின் கஜானாவே
நீ திருடிய பொக்கிஷத்தைத்
திருப்பிக் கொடுத்து விடு
என் தாய்க் கவிஞனே
உன்னை இனி தரிசிப்பதெப்படி?
சாவின் மாளிகைக்கு
ஜன்னல்களும் கிடையாதே
நீ காதலைப் பாடினாய்
அது
இளமையின் தேசிய கீதமானது
நீ சோகம் பாடினாய்
அது
ஆயிரங் கண்ணீருக்கு
ஆறுதல் ஆனது
நீ தத்துவம் பாடினாய்
வாழ்க்கை தனது
முகமூடியைக் கழற்றி
முகத்தைக் காட்டியது
அரசியல் – உன்னை
பொம்மையாக நினைத்தபோதும்
நீ
உண்மையாகத் தானிருந்தாய்
உன் எழுத்து
ஒரு
கால் நூற்றாண்டுக்
கலாசாரத்தில் கலந்திருக்கிறது
“மரணத்தின் பின் என்னை
விமர்சியுங்கள்” என்று
வேண்டிக் கொண்டவனே
இன்று மரணத்தையன்றி
வேறொன்றையும் எமக்கு
விமர்சிக்க வலிமையில்லை
எவரேனும் இறந்தால்
உன் இரங்கற்பாப் படித்து
இதயம் ஆறுவோம்
இன்று இரங்கற்பாவே
இறந்து விட்டதே
உன்னை சந்தித்துப் பேசும்
சர்க்கரைப் பொழுதுகளில்
உன்
கண்களில் வெளிச்சத்தைக்
காதலித்தேனே
இனி அந்த வெளிச்சம் -
உன்
இமைகளைப் பிரித்தாலும்
இருக்குமா?
முப்பது வருஷத் தென்றலே
நீ நின்றுவிட்டதால் -
மனசில் புழுக்கம்
விழிகளில் வியர்வை
உன்
பூத உடலில் விழும்
பூவிலுள்ள தேனெல்லாம்
கண்ணீராய் மாறிவிடும்
கவிஞனே ..
உன்னைச் சந்திப்பது இனிமேல்
சாத்தியமில்லையா?
உடைந்த இருதயம்
ஒட்டாதா?
சொர்க்கத்தில் சந்திக்கலாம்
என்று
சொல்லுகிறார்களே
இந்த மூட நம்பிக்கை
நிஜமாய் இருந்தால்
எனக்கு நிம்மதி கிடைக்கலாம்
வைரமுத்து (1981)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home