Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday, 22 June 2009

சிலப்பதிகாரத்தில் இலக்கியம்





சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்
விளக்கும் வரலாற்று நூல்.

''மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும் அஞ்சாது
நீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்''
என்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள்.
தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு
படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார்.
தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை என நிறுபனம்
காட்டுவது சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத் தலைவனும்
தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின்
வரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப் பின்பு
தோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரிய தனிப்பெருமையாகும்.
ஆகவேதான் , '' நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ் நாடு ''
என்று டாக்டர் சாமிநாதய்யரும் ; '' யாமறிந்த புலவரிலே... இளங்கோவைப்போல் பூமிதனில்
யாங்கனும் பிறந்தில்லை... '' பாரதியும் சிறப்பித்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தின் கருப் பொருள்களாக அறிமுகப்படுத்தியவை:
'' அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்றாவதூ உம்
உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டும் என்பதூ ஊம்.... '' கும்.

அவர் கருத்துப்படி :- (1) அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
(2) உரைச்சால் பத்தினியை உயர்ந்தோரேத்துவர்.
(3) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
என்ற மூன்றுமே ஆகும்.
எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நியதிகளைக் கூறுவதோடு அமையாமல்,
பிற்காலத்திற்குத் தேவைப்படும் நீதிகளைப்போதிப்பதாகவும் இருக்கவேண்டும். சேர நாட்டு
கவிஞர் தந்த சிலப்பதிகாரத்திற்கு இந்தச் சிறப்புண்டு. ஆகவேதான் காலத்தை வென்ற
இலக்கியமாக - காப்பியமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சிலப்பதிகாரத்திக் கதை
புனைந்துரை அன்று ; உண்மையில் நிகழ்ந்த வரலாறு. காப்பியத்தை அழகு செய்யவும்,
படிப்போர்க்கு சுவைதரவும் அங்குமிங்கும் குறைந்த அளவில் கற்பனைகளையும் வைத்துள்ளார்.

இளங்கோ கவிஞர்.
இந்த காப்பியத்திலே இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட
இலைமறை காயென மறைத்துவைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம்
எனலாம். அப்படி மறைக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்று கோவலனின் மதுரை பயணம் பற்றிய அந்தரங்கம்.

அதில் ''யாழிசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தன் விளைவாகக் கடலும்,
காவிரியும் கலக்கும் இடத்திலே பல்லாண்டு தன்னோடு கலந்து வாழ்ந்த மாதவியைப் பிரிந்து
மறுகணமே கண்ணகி இல்லத்தை நோக்கிச் செல்வது.'' கண்ணகியை பல்லாண்டுகளாக பார்க்கத்
தவறி விட்டவனாதலால் அவளுடைய வாடிய மேனி அவனுக்கு வருத்தம் அளிக்கிறது. வரும்
வழியிலேயே நன்கு ஆலோசித்து எதிர்காலம் பற்றித்தான் எடுத்த முடிவை எதிர் மறையில் கண்ணகிக்கு அறிவிக்கிறான்.
அது ..

''சலம் புணர் கொள்கைச்
சலதிய டாடிக்
குலந்தரு வான்பொருள்
குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத்
தரும் எனக்கு....'' - என்பதாகும்

கண்ணகியின் வாடிய மேனி அவனுக்கு வருத்ததத்தைத் தந்திருந்தும், அதனை வெளிப்படையாக
கூறாது, மதுரை செல்லும் வழியில் எங்கும் கூறாது, மாதரி இல்லத்தில் மட்டும் கூறி,
'சிறுமுதுக் குறைவிக்கும் சிறுமையும் செய்தேன்' என்று கூறி, கண்ணகியின் வருத்தத்தைத்
துடைக்க முயல்கிறேன். இது ஆண்களுக்குகே இருக்கிற வீம்பு அல்லது தயக்கம் எனக்கூறலாம்.
இதனை பூகாரில் கூறாது மதுரையில் கூறுவது கவிஞர் மன இயல்புகளையும் அறிந்துவைத்துள்ளார்.
கண்ணகி தேவியின் வருத்தத்தை தீர்க்க- அம்மாபத்தினி மீண்டும் வாழ்வாங்கு வாழ வாய்பளிக்க,
வாணிபம் செய்ய பொருளீட்டவும் தன் கையில் மூலதனம் இல்லை என்பதனைச் சொல்லாமல்
சொல்லுகின்றான் கோவலன். '' பாம்பறியும் பாம்பின் கால் '' என்பது போல், வணிக மகளானகண்ணகி தன் கணவன் கூறிய வாசகத்தின் உட்பொருள் அறிந்து, '' சிலம்புள, கொள்ளுங்கள் ''
எனக்கூறினாள். தன் எண்ணம் பலித்ததறிந்த கோவலன்,

'' சிலம்பு முதலாகச்
சென்ற கலனோடு
உலந்த பொருளீட்டுத
லுற்றேன் மலர்ந்த சீர்
மாட மதுரை யகத்துச் சென்ற
என்னோடு ங்கு
ஏடலார் கோதாய் எழுக !''

என்று கூறி, கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரை புறப்படுகிறான்.
மாதவியைப் பிரிந்துபின் கண்ணகியின் இல்லத்தை நோக்கி வழி நடந்தபோது தன் எதிர்காலம்
பற்றிக் கோவலன் எடுத்த முடிவு ? எப்படியேனும் சிறிது மூலதனத்தைத் தேடிக்கொண்டு,
மீண்டும் தன் குலத்தொழிலான வாணிபத்தில் ஈடுபட்டுக் கண்ணகியுடன் கூடி வாழ்வாங்கு வாழ
வேண்டும் என்பதாகும். அவனது முடிவுக்கு எதிர்பாராத வகையில் தன் காற்சிலம்புகளைத் தந்து
மூலதனம் திரட்ட வாய்ப்பளித்து விட்டாள் கண்ணகி.

சிலம்பை விற்று மூலதனம் தேடி வாணிபம் செய்து பிழைக்கக் கோவலன் மதுரை செல்வது,
அதனை '' பொருள் வயிற் பிரிவு '' என்கின்றன பண்டைய நூல்கள். பொருள் தேடும் பொருட்டுத்
தலைவன் தன் தலைவியைப் பிரிந்து நாடு விட்டு நாடு சென்றால், அது '' பொருள்வயிற் பிரிவு ''என்ற
இலக்கணத்தின் பாற்படும்.
இதற்கு பொருள் உரைத்த இளம்பூரணர், '' இதுவும் பொருள்வாயிற் பிரிவதோர் இலக்கணம்
உணர்த்துகிறது. இங்கு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிந்பிரிவும் கலத்திற் பிரிவும் என
இருவகைப்படும். அவற்றுள் கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை என்றவாறு '' என்று
விளக்கியுள்ளார். நச்சினார்க்கினியார் '' கலத்திற் பிரியும் காலத்தில் மட்டுமின்றி, காலிற் பிரியும்
காலத்திலும் தலைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் தலைவனுக்கு இல்லை '' என்கிறார்.

இதனை

'' ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியோடு
கூடச் சேறலின்று என்றவாறு.''
''தலைவியை உடன் கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும், ஒழிந்த
சான்றோர் செய்யுட்களுள்ளுங் காண்க. இதுவே சிரியர்க்குக் கருத்தாதல் வேண்டும்.
தலைவியோடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறி வழக்கஞ்
செய்யாமையான உணர்க ''
'' கலத்திற் பிரிவு ' என்பது, மரக்கலத்தின் வாயிலாகச் செல்லும் கடற்பயணமாகும். ' காலிற்
பிரிவு ' என்பது நிலவழிச் செல்லும் கால்நடைப்பயணமாகும். கோவலன் சோழ நாட்டின்
தலைநகரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிய நாட்டின் தலைநகருக்குச் சென்றதனால் அவனுடைய பிரிவு
கலத்திற் பிரிவு காது ; காலிற் பிரிவேயாகும் என்கிறார்.
மதுரை நகரில் சிலம்பு விற்கும் பொருட்டாக மாதரி இல்லத்தில் கண்ணகியிடமிருந்து விடை
பெற்றுச் செல்லும் கோவலன்,

''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய் என்செய்தனை ''

என்று கண்ணகியிடம் கூறுங்கால்,பொருள் காரணமாகப் புகாரைவிட்டுப் பிரிந்தவன்
தலைவியையும் உடன் அழைத்துச் சென்றது ' வழு ' என்பதை ஒப்புக்கொள்கிறான்.
'' நம்முடைய நகரிடத்து நின்றும் இந்நகரிடத்து வருவதற்கு ' எழுக ' வென்றேனாக, அது
முறைமயன் என மாறாது என்னோடு ஒருப்பட் டெழுந்தாயே ! '' என்கிறான் கோவலன்.
தமிழினத்து வணிகர் மரபுப்படி பொருள் காரணமாகப் புகாரை விட்டுப் பிரிந்த கோவலன்
தன்னுடன் கண்ணகியை அழைத்துச் சென்றிருக்க கூடாது. அது வணிக மரபுக்கு மாறுபட்ட
இழுக்குடைய செயல். இதனை உணர்ந்தே '' உன்னை நான் அழைத்து வந்தது வழுவுடைய
செயல் '' என்பதைக் கண்ணகியிடமே கூறுகிறான் கோவலன்.
சமணரான இளங்கோவடிகள் தமிழர்களின் பண்பாடு ,கலாச்சாரம், இலக்கணம் அறிந்துள்ளது
நயமான இனிமையாகும்.

தமிழ் வணிகருடைய மரபுக்கு மாறாகக் கண்ணகியைக் கோவலன் தன்னுடன் அழைத்துச்
செல்லக் காரணம் என்ன? இந்தக் காரணத்தை வெளிப்படையாகக் கூறாமல், இலைமறை
கனியென மறைத்து வைத்துள்ளார் இளங்கோவடிகள். அவர் மறைத்த பொருளை உவமை
நயமாக பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில், தந்தையின் வாய்மையைக் காக்கும் பொருட்டு ராமன் கானகம்
செல்கிறான். தொல்காப்பியர் கூறுகின்ற மூவகைப் பிரிவுகளுக்கும் ராமன் அயோத்தியை
விட்டு பிரிந்ததற்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் சீதையை உடன் அழைத்துச் செல்ல
ராமன் விரும்பவில்லை. அவள் உடன் வர விரும்பியும் மரபுக்கு மாறுபட்ட செயல் என்று
கூறாமல், '' பாலைவனம் உன் பாதத்தைச் சுடும் '' என்கிறான். அவளை அயோத்தியில் நிறுத்த
முயல்கிறான். '' நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு '' என்று கூறி, பிடிவாதம் பிடிக்கவே
வேறு வழியின்றி அவளை அழைத்துச் செல்கிறான்.
கோவலன் கண்ணகி கேளாத நிலையில் தன்னுடன் வருமாறு அழைத்துச் செல்கிறான்.
'' மரபுக்கு மாறாக உடன் வருமாறு உன்னை அழைத்தபோது நீயேனும் மரபின் மாண்பை
நினையூட்டி உடன் வர மறுத்திருக்கலாம் ?'' என்று மாதரி இல்லத்தில் கோவலன் கண்ணகியிடம்
சொல்லாமல் சொல்கிறான். தற்கு, ''வழுவென்னும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய்
என் செய்தனை '' என்று கோவலன் கூறியதே சான்று.

மதுரை புறப்பட நினைத்த கோவலன் திரும்பவும் சோழ நாட்டுக்கு வருவதில்லை என்ற
முடிவு செய்து கொண்டு , கண்ணகியையும் உடன் அழைத்து செல்கிறான். திரும்பவும்
புகார் நகருக்கு வரும் எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் பொருள்வயிற் பிரியும்
தலைவனுக்குரிய நெறிப்படி தான் மட்டுமே சென்றிருப்பான்.
கோவலன் மிக சிறந்த தன்மானம் கொண்டவன். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் மானமுடையவன்.
மாதவியைப் பிரிந்து கண்ணகி இல்லம் புகுந்த கோவலன், அவள்
வாழ்ந்த ஏழுநிலை மாடமுடைய மாளிகையில், வேறெந்தப் பகுதிக்கும் செல்லாமல்,
'' பாடமை சேக்கைப் பள்ளியுள் புகுந்தான் ''.
பல்லாண்டு கண்ணகியைப் பிரிந்து கோவலன் மீண்டும் வந்ததும் நேரே பள்ளி அறை
புக வேண்டும். இங்குதான் ளங்கோ பாத்திரப் படைப்பின் பண்பை இலக்கிய நயமாக
விலக்குகிறார். பள்ளியறை கணவன் - மனைவி இருவம் மட்டும் செல்லக்கூடிய
அந்தரங்க அறை. வேறு யாரும் தம்மைப் பார்த்துவிடக்கூடாது என்ற நினைப்பில்,
எண்ணத்தில் பள்ளியறை புகுகிறான். காரணம் , கண்ணகி வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்
போதே மறுநாள் காலை புகாரை விட்டு வெளியேற முடிவு செய்துக்கொண்டான்.
கையால், புகாரில் தான் தங்கியிருக்கும் இரவு பிறர் கண்ணில் பாடமல் மறைந்திருக்க
விரும்பினான்.

மறுநாள் காலைக் கதிரவன் அடிவானத்தில் தன் சுடர்களை வீசி எழுவதற்கு முன்பே -
இருளிலேயே தான் பிறந்த பதிவிட்டு பெயர்கிறான். இதுவும் அவனது தன்மானத்திற்கு
சான்றாகும். புகாருக்கு வெளியே கவுந்தியடிகளைச் சந்தித்தபோது,

'' உருவும் குலனும்
உயர்பே ரோழுக்கமும்
பெருமகன் திருமொழி
பிறழா நோன்பும்
உடையீர் ! என்னே
உறுக ணாளரிற்
கடைகழிந்து இங்ஙனம்
கருதிய வாறு ....''
என்று கேட்டபோது, ' மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன் ' என்கிறான் கோவலன்.

அபோதும் கூட ' பொருள் தேடும் பொருட்டு மதுரை மூதூர் செல்கின்றேன் ' என்கிறான்.
அந்த சமயத்தில் கூட , ' என் மனைவியின் காற்சிலம்பை விற்றுப் பொருள் தேடப் போகிறேன் 'என்று
சொல்லவில்லை. அப்படிக் கூற மானமுள்ள அவனது நெஞ்சு மறுத்திருக்க வேண்டும்.
மதுரையில் , கோவலனைக் காட்டிப் பொற்கொல்லன் கூற, அவனது கூற்றை ஒரு வார்த்தை
கூட கோவலன் கூறவில்லை. ம் ;, தன்னைக் காட்டி. '' இவனே கள்வன் '' என்று
பொற்கொல்லன் கூறக் கேடோதே மானமுடைய கோவலன் மாண்டுபோய் விட்டான்.
கையால், கல்லாக் களிமகனான காவலன் ஒருவன் தந்து கையிலிருந்த வாளால்
வெட்டியபோது, '' கோவலன் கொலையுண்டான் '' என்று கூறாமல்,

''கல்லாக் களிமகன்
ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்
விலங்கூடு அறுத்தது ''
என்கிறார் இளங்கோவடிகள். '' விலங்கூடு அறுத்தது '' என்னும் சொல் ஆ ழ்ந்த பொருளுடையது.

இங்கும் இளங்கோவடிகளின் இலக்கிய உவமை நயத்தினைக் காணலாம். தான் கள்வன்
என்று கேட்டப்போதே கோவலன் மாண்டு போய்விட்டான் என்பதனை நினைவூட்டும் வகையில்
காவலன் வீசிய ஒளி பொருந்திய வாளானது கோவலன் உடலைக் குறுக்காகத் துண்டாடியது
என்கிறார் ளங்கோ. ம் ; உயிர் முன்பே போய்விட்டதால் ,வெறும் உடலை வெட்டினான் கொலைஞன்.
' கள்வன் ' என்னும் பழிசொல்லை, இழிசொல்லை கேட்டபோதே உயிர் நீத்தான்.
மொழி நுட்பம் -அடுக்கு மொழி ற்றல் :
கணவனை இ ழந்த பாண்டிவேந்தன் அரண்மனை வாயிலை அடைந்து வாயிற் காவலனுக்குக்
காட்சி அளிக்கிறாள். '' வாயிலோயே , வாயிலோயே !'' என்று வாயிற்காவனை விளித்து,

வாயிலோயே ; வாயிலோயே !
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே !
இணையரிச் சிலம்பொன் ஏந்திய கையன்
கணவனை இழந்தாள் கடையகத்தான் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே ! [ என ]

கண்ணகியைக் கண்ட வாயிற்காவலன் நடுநடுங்கிப்போனான். தென்னவன் செழியவன்
அரண்மனை வாயிலியே, அதற்கு முன் கண்ணகியின் கோலத்தில் வேறு யாரும் வந்து
வாயிற் காவலனை கண்டதில்லை. அதனால் கண்ணகியின் வரவு கண்டு அஞ்சி அவளது
வரவை அறிவிக்க உள்ளே ஓடுகிறான்.

வாழி ! எம் கொற்கை வேந்தே வாழி !
தென்னம் பொருப்பின் தலைவ வாழி !
செழிய வாழி ! தென்ன வாழி!
பழியடு படராப் பஞ்சவ வாழி
அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடமேறிய மடக்கொடி
வெற்றிவேற் அடக்கைக் கொற்றவை யல்லன்;
அறுவர்க் கிளைய நங்கை, இறைவனை
டல் கண்டு அருளிய அணங்கு, சூருடைக்
கானகம் உகந்த காளி ; தாருகன்
பேருரம் கிழிந்த பெண்ணும் அல்லன்;
பொற்றோழில் சிலம்ம்பென் ஏந்திய கையன்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே !

மன்னனைக் கண்டதும் ' வாழி ' என ஒரு முறை வாழ்த்துகிறான். ' என் கொற்கை வேந்தே, வாழி
'என்று திரும்பவும் ஒரு முறை வாழ்த்துகிறான். அதாவது, வாயிற்காவலனின் வாய் ' வாழி 'என்று கூறிய
ஒவ்வொரு சமயத்திலும், அவன் தலை வணங்கிக் கொண்டே இருந்ததாம் !
ஆ ம் ; பாண்டியன் நெடுஞ்செழியனை வாயிற் காவலன் இனிமேல் வாழ்த்தப் போவதில்லை.
அவன் தலையும் வணங்கப்போவதில்லை. அதனால், ஆ று முறை வாழ்த்தியும் வணங்கியும்
அவலச்சுவையை வெளிப்படுத்துகிறான். இதுதான் இறுதியான வாழ்த்தும் வணக்கமும்
என்று இளங்கோவடிகள் சொல்லமல் சொல்கிறார்.

கோவலன் கள்வனல்ல என்பதனைக் கண்ணகியால் அறிந்த பாண்டிய வேந்தன்,
' பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்டேன் ' இது அவனது தீர்ப்பின் முதல் வாசகம்.
இதிலே மறைந்திருப்பது , ' அமைச்சர்களின் சொல் கேட்கத் தவறினேன் ' என்பதாகும்.
ம் ; கேட்க வேண்டிய அமைச்சர்களின் சொல் கேட்கத தவறியது ஒரு குற்றம் ;
கேட்கத் தகாத பொற்கொல்லன் சொல் கேட்டது மற்றொரு குற்றம். ஒன்றை
வெளிப்படையாக சொல்கிறான். மற்றொன்றை அதனுள்ளேயே மறைந்து கிடக்கிறது.
மன்னன் சொன்ன மறுவாசகம், '' யானோ அரசன் ?'' என்பதாகும். இதிலே . ' யான் அரசல்லன் '
என்ற பொருளும் மறைந்து கிடக்கிறது.
அடுத்து, 'யானே கள்வன்' என்றான். 'யானே ' என்பதிலுள்ள பொருள் கோவலன் கள்வனல்லன்
என்னும் பொருளைத் தருகிறது.
இவ்வளவு பொருள் புதைந்த, அருள் நிறைந்த, அறஞ் செறிந்த தீர்ப்பை , தமிழ் மொழியிலேதான்
கூறமுடியும்.

தமிழ் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் மிகச் சிறந்த நாடகக் காப்பியமாகும்.
' நாடகம் ' என்ற சொல்லுக்கு நாடு முழுவதையும் -அதாவது நாட்டிலுள்ளஅனைத்தையும் தன்னகத்தே
காட்டுவது என்று பொருளாகிறது. சிலப்பதிகாரம் நாடு முழுவதையும் தன்னத்தே காட்டும் தன்மை
உடையதாகும். சேர-சோழ- பாண்டிய மண்டலங்களைக் கொண்டதாக காண்கிறோம்.
அந்தணன், அரசர்,வணிகர், வேளாளர்ள கிய நால்வகையாளலிருந்தும் பாத்திரங்களை
அறிமுகப்படுத்தியுள்ளார்சிரியர்.

இலக்கண முறைப்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்,பாலை என ஐவகை நிலங்களை
பிரித்துக் காட்டியுள்ளார். ஐவகை நிலங்களை யன்றி, ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தனித்தனித்
தெய்வங்களை அந்தந்த நிலமக்கள் வழிபடுவதையும் தெளிவாக சாட்சிப்படுத்தியுள்ளார்.
மருதத்தில் இந்திர விழா , பாலையில் கொற்றவை வழிபாடு, குறிஞ்சியில் முருகன் வழிபாடு,
முல்லையில் திருமால் வழிபாடு, நெய்தலுக்குரிய வருணன் வழிபாடு என்று வகைப்படுத்தி,
'கானல் வரி'ப்பாட்டின் றுதியில், ''மாக்கடல் தெய்வம் நின் மலரடி வணங்குவதும்'' என்று
கடல் தெய்வத்தின் வழிபடுதலைக் காண்கிறோம்.

பாத்திரங்களில் [மக்களில்] பன்னிரண்டு வயதுடைய கண்ணகி முதல் முதியோளான
இடைக்குல மாதரி வரையிலும் பலவேறு பருவத்தினரையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம்.
இப்படி, நாடு முழுவதையும் தன்னகத்தே காட்டும் தலைசிறந்த நாடகக் காப்பியமாகிய
சிலப்பதிகாரத்திலே குறுநடை பயிலும் குழந்தை நடமாடக் காண்கிறோம். இந்த காப்பியத்திலே
இளங்கோவடிகள் வெளிப்படையாகக் கூடியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்து
வைத்துதுள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவை அதிகம் எனலாம்.

சிலப்பதிகாரம் பயில்வோர், தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் போதித்த வாழ்க்கை
நெறியோடு சிலப்பதிகாரப் பாத்திரங்களைப் பொருத்தி ராய்வார்களாயின், எத்தனை
எத்தனையோ இலக்கிய இன்பங்களை , உவமை நயங்களை அனுபவிப்பர். '' நவில் தொறும்
நூல் நயம்போல் '' என்று வள்ளுவர் கூறினாரே, அதற்குச் சான்றாக அமைந்த பெரு நூல்,
காப்பியம் மகாகவி இளங்கோ தந்த சிலப்பதிகாரம்.

2 Comments:

Blogger sivanes said...

//சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்சமுதாயத்தின் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை நெறிமுறைகளையும்
விளக்கும் வரலாற்று நூல்.//

மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்!

22 June 2009 at 09:41  
Blogger Ramani said...

unggal paratukku nanri.

Ramani

1 September 2009 at 00:42  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home